ADDED : மே 22, 2025 11:39 PM

புதுடில்லி:நாட்டின் தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி, நடப்பு மே மாதத்தில் 13 மாத உச்சத்தை எட்டியுள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் துறை நிறுவனங்களின் வலுவான செயல்பாடே இதற்கு முக்கிய காரணம்.
மாதந்தோறும் வெளியிடப்படும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டில், இம்மாதத்துக்கான தரவுகளில் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு 61.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின், இதுவே அதிகபட்ச கூட்டு வளர்ச்சி. கடந்த மாதம் இது 59.70 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
இம்மாதம், சேவைகள் துறை பி.எம்.ஐ., குறியீடு 61.20 புள்ளிகள் என்ற 14 மாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்கள் குறைந்துள்ள நிலையில், சேவைகள் துறை நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.