ADDED : நவ 22, 2025 12:10 AM

புதுடில்லி: தயாரிப்பு துறையின் உற்பத்தி சரிவால், நாட்டின் தனியார் துறை வளர்ச்சி கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு இம்மாதம் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் வெளியிடப்படும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையின் இம்மாதத்துக்கான தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனியார் துறையைச் சேர்ந்த தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சியைக் குறிக்கும், எச்.எஸ்.பி.சி., பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., குறியீடு இம்மாதம் 59.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. கடந்த மே மாதத்துக்கு பின் இதுவே மிகக் குறைந்த வளர்ச்சியாகும். கடந்த அக்டோபரில் வளர்ச்சி 60.40 புள்ளிகளாக இருந்தது.
இது 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியைக் குறிக்கும்; குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும். தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைந்ததால், தொழிற்சாலைகளில் உற்பத்தியும் குறைந்தது. சேவைகள் துறை நிறுவனங்களின் வளர்ச்சி முந்தைய மாதத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் சீராக இருந்த நிலையில், சேவைகள் துறை சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் பிற நிறுவனங்களின் போட்டி மற்றும் வெளிநாடுகளிலேயே மலிவு விலையில் மாற்று பொருட்கள் கிடைப்பதால், சர்வதேச தேவை வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் பணியமர்த்தல்கள் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
உள்ளீட்டு பொருட்களின் விலையும், விற்பனை விலையும் சிறிய உயர்வு கண்டன. எதிர்கால உற்பத்தி குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை கடந்த 2022ம் ஆண்டுக்கு பின் இம்மாதம் கணிசமாக குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

