எத்தனால் இறக்குமதி கட்டுப்பாடு தொடர கோரிக்கை அரசிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
எத்தனால் இறக்குமதி கட்டுப்பாடு தொடர கோரிக்கை அரசிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2025 11:29 PM

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து எத்தனால் இறக்குமதி செய்ய, தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்திய சர்க்கரை மற்றும் பயோ எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருளாக பயன்படுத்தும் வகையில், எத்தனால் கலப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
வரும் 2030க்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் எரிபொருள் பயன்பாட்டுக்கான எத்தனால் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.
அதே நேரம், எரிபொருள் அல்லாத பயன்பாட்டுக்கான எத்தனால் இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
இதற்கிடையே, இந்தியாவின் மிகப்பெரிய எத்தனால் எரிபொருள் சந்தையை குறிவைத்து, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு, வர்த்தக ஒப்பந்த பேச்சின் போது, அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய சர்க்கரை மற்றும் பயோ எரிசக்தி உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் பல்லானி, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது அமலில் உள்ள எரிபொருள் பயன்பாட்டுக்கான எத்தனால் இறக்குமதிக்கு பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளை அரசு தொடர வேண்டும். உள்நாட்டில் எத்தனால் உற்பத்திக்கு அளித்து வரும் ஆதரவை தொடர வேண்டும்.
நிலையான கொள்கை என்பதை அரசு உறுதிப்படுத்துவதுடன், தொடர்ந்து முதலீடுகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
இன்றைய நிலையில், எத்தனால் கலப்பு திட்டம் என்பது, எரிபொருள் திட்டம் மட்டுமல்ல. 5.5 கோடி கரும்பு விவசாயிகள், அவர்களது குடும்பத்தினருக்கு அதிகாரமளிக்கும் கிராமப்புற வளர்ச்சியை உள்ளடக்கிய ஒன்றாகும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.