ADDED : நவ 04, 2024 10:29 PM

புதுடில்லி; நாட்டின் தயாரிப்பு துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. கடந்த செப்டம்பரில், எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருந்த தயாரிப்பு துறை வளர்ச்சி, அக்டோபரில் சற்றே அதிகரித்துள்ளது.
புதிய ஆர்டர்கள், வெளிநாட்டு விற்பனை ஆகியவை அதிகரித்ததே வளர்ச்சி அதிகரிக்க காரணமாக அமைந்தது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
அக்டோபர் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, கடந்த செப்டம்பரில் 56.50 புள்ளிகளாக குறைந்த நிலையில், அக்டோபரில் 57.50 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; குறைவாக இருந்தால், சரிவை குறிக்கும்.
புதிய ஆர்டர்கள், வெளிநாட்டு விற்பனை ஆகியவை அதிகரித்தது வளர்ச்சிக்கு உதவியது. இது, இந்தியாவின் தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு வலுவான தேவை உள்ளதை உணர்த்துகிறது. புதிய பொருட்களின் அறிமுகம் மற்றும் சந்தைபடுத்துதல் நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு உதவின.
உள்ளீட்டு பொருட்களின் விலையும், விற்பனை விலையும் வலுவாக அதிகரித்தன. மூலப் பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் தொழிலாளர் செலவுகள், போக்குவரத்து செலவுகள் ஆகியவையும் சேர்த்து, நிறுவனங்களின் செலவை அதிகரித்தன. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் பணி நியமனம் அதிகரித்தது.
வலுவான நுகர்வோர் தேவை காரணமாக, எதிர்கால வணிகம் குறித்து நிறுவனங்கள் நம்பிக்கையோடு உள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.