உற்பத்தி ஊக்கத்தொகை திட்டம் 806 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
உற்பத்தி ஊக்கத்தொகை திட்டம் 806 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
ADDED : ஜூலை 22, 2025 10:55 PM

புதுடில்லி:மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை 14 துறைகளைச் சேர்ந்த 806 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய இணையமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்து உள்ளார்.
நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த 2021ல் மத்திய அரசு 1.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது. இதில், தொலைத்தொடர்பு, மின்னணு பொருட்கள், மருந்து உற்பத்தி, ஜவுளி, வாகனத்தயாரிப்பு உள்ளிட்ட 14 துறைகள் பயன்பெறுகின்றன.
இதுகுறித்து பார்லி., யில் அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம் வரை, 14 துறைகளுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டு உள்ளது. இதனால், உற்பத்தி அல்லது விற்பனை 16.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நேரடி, மறைமுக வேலைகள் சேர்த்து 12 லட்சம் புதிய வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 806 நிறுவனங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
முதல் 3 ஆண்டுகளில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 2.66 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

