'டீசலில் 15% எத்தனால் கலப்பு ஆராய்ச்சியில் முன்னேற்றம்'
'டீசலில் 15% எத்தனால் கலப்பு ஆராய்ச்சியில் முன்னேற்றம்'
ADDED : அக் 15, 2024 10:06 PM

புதுடில்லி:பெட்ரோலை அடுத்து டீசலில் 15 சதவீதம் எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:
கடந்த 2014ம் ஆண்டில், 1.53 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு, தற்போது 15 சதவீதத்தை எட்டியுள்ளதாக கூறினார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை அடுத்த ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்க, அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. டீசலில், 15 சதவீதம் எத்தனாலை கலந்து பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது.
எத்தனால் எரிபொருள் வினியோகத்துக்காக, பிரத்யேகமாக பம்ப்புகளை அமைக்கும் பணிகள், தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது.
மேலும், 400 எத்தனால் வினியோக நிலையங்களை ஏற்படுத்த, 'இந்தியன் ஆயில்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எரிபொருளை மாற்றி பயன்படுத்தும், 'பிளக்சி' வாகனங்களை அறிமுகம் செய்ய, 'மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா மோட்டார்ஸ்' ஆகிய நிறுவனங்களை சந்தித்து பேசியுள்ளோம்.
'டி.வி.எஸ்., பஜாஜ், ஹோண்டா' ஆகிய இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள், மாற்று எரிபொருளில் ஓடக்கூடிய பிளக்சி பைக்குகளை தயாரிக்கவும் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.