ADDED : அக் 03, 2024 03:02 AM

புதுடில்லி:உலக சந்தைகளில் இந்திய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வகையில், 'மேட் இன் இந்தியா' லேபிளை முன்னிலைப்படுத்துவதற்கான திட்டம் குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து, டில்லியில் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுவிட்சர்லாந்து என்றதும் கைக்கடிகாரம், சாக்லேட் மற்றும் வங்கிகளை நினைவு கொள்கிறோம். அதுபோல, ஒவ்வொரு பொருளுக்கும் சேவைக்கும் சில நாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
இந்திய தயாரிப்புகளும் அதுபோல பிரபலமாகும் வகையில், மேட் இன் இந்தியா லேபிளுக்கான திட்டத்தை உருவாக்குவது பற்றி, அரசு பேச்சு நடத்தி வருகிறது.
இத்திட்டம் குறித்து உயர்நிலை அதிகாரிகளை கொண்ட குழு ஆராய்ந்து வருகிறது. ஜவுளி உட்பட பல துறைகள் நம்மிடம் வலிமையாக உள்ளன. அவற்றை உலக சந்தையில் பிரபலப்படுத்த அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தயாரிப்புகளை, உலக சந்தைகளில் விளம்பரப்படுத்த 'இந்தியா பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன்' என்ற பெயரில் அரசு அமைப்பு செயல்படுகிறது.
இந்நிலையில், மேட் இன் இந்தியா லேபிளை பிரபலப்படுத்த, புதிய திட்டம் குறித்து அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

