ADDED : அக் 05, 2025 12:12 AM

புதுடில்லி:இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் வரி விதிப்பு தொடர்பான வழக்குகளை குறைக்கும் நோக்கில், உத்தேச வரி விதிக்க நிடி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் வரி விதிப்புகள் உள்ளிட்ட நிதி சார்ந்த ஆலோசனைகளை அரசுக்கும் பல்வேறு துறைகளுக்கும் நிடி ஆயோக் அளித்து வருகிறது. வரிக்கொள்கை செயல் வடிவம் -வரிசை ஒன்று என்ற பரிந்துரை அறிக்கையை அது வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:
நம் நாட்டில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடைபெறுகின்றன. இவற்றை குறைக்கும் நோக்கில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உத்தேச வரி விதித்து, இருதரப்பு இடையேயான பிரச்னையை தவிர்க்கலாம்.
இதன் படி, வெளிநாட்டு நிறுவனங்கள், எளிமைப்படுத்தப்பட்ட முன்கூட்டி வரையறுக்கப்பட்ட வரியை செலுத்த தேர்வு செய்யலாம். துறை சார்ந்த சதவீதத்தில், மொத்த வருவாயில் இதை செலுத்த அனுமதிக்கலாம். இதனால், வரி வசூலிப்பு துறையினரிடம் இருந்து நோட்டீஸ், வழக்கு ஆகியவற்றை நிறுவனங்கள் தவிர்க்க முடியும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.