ADDED : நவ 07, 2025 01:43 AM

மும்பை,:பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 49,456 கோடி ரூபாய் மொத்த லாபம் ஈட்டிஉள்ளன. இது, கடந்தாண்டை விட 9 சதவீத வளர்ச்சி.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 45,547 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய பொதுத்துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் வரையான இரண்டாவது காலாண்டில், 3,909 கோடி ரூபாய் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபத்தில், நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மட்டும், 40 சதவீதம்.
இவ்வங்கி 20,160 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிலையில், முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட இது 10 சதவீத வளர்ச்சி. நிகர லாபத்தைப் பொறுத்தவரை அதிகமான நிகர லாபத்தை ஈட்டியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிதான்.
கடந்த ஆண்டைவிட இதன் நிகர லாபம், 58 சதவீதம் அதிகரித்து 1,226 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம், 33 சதவீதம் உயர்ந்து 1,213 கோடி ரூபாயாக உள்ளது.
பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் முறையே, 8 மற்றும் 10 சதவீத லாப வீழ்ச்சியை சந்தித்தன. இவை முறையே 4,809 கோடி, 4,249 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கின்றன.

