ADDED : மே 11, 2025 08:35 PM

பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளமாக, நிதி கழக முதலீட்டாளர்கள் பொதுத்துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
நிதி சேவை நிறுவனம் மோதிலால் ஆஸ்வல் பைனான்சியல் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, 2025 நிதியாண்டில் வெளிநாடு மற்றும் உள்நாடு நிதி கழக முதலீட்டாளர்கள் பொதுத்துறை பங்குகளில் முதலீடு செய்வது அதிகத்திருப்பதாக தெரிவிக்கிறது.
பொதுத்துறை பங்குகளில் வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்களின் முதலீடு, ஆண்டு அடிப்படையில் 140 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. உள்நாட்டு நிதி கழக முதலீட்டாளர்களின் முதலீடு, 120 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் தனியார் நிறுவன பங்குகளில், வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்கு 90 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. பொதுத்துறை பங்குகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்திருப்பதற்கான காரணங்களாக மதிப்பு உயர்வு, கவன ஈர்ப்பு மற்றும் சீர்திருத்த தன்மை கருதப்படுகின்றன.
சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுத்துறை நிறுவனங்களில் அரசு தன் பங்கை குறைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொதுத்துறையில் வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, காப்பீடு உள்ளிட்ட பிரிவில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.