ADDED : அக் 30, 2025 02:55 AM

புதுடில்லி: புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் புளியங்குடி எலுமிச்சை முதல் முறையாக பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏ.பி.இ.டி.ஏ., எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், விமானம் வாயிலாக இதை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், “இந்தியாவிலிருந்து முதல் முறையாக பிரிட்டனுக்கு புவிசார் குறியீடு பெற்ற இரண்டு வகை எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
''தமிழகத்தின் புளியங்குடி எலுமிச்சை மற்றும் கர்நாடகாவின் இண்டி எலுமிச்சை ஏற்றுமதியாகியுள்ளன. இது நம் நாட்டின் விவசாயிகளுக்கு பெரிய உத்வேகம் அளிப்பதோடு, இந்திய வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கர்நாடகாவின் விஜயபுராவை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற சுதேசி இண்டி எலுமிச்சை பழங்கள், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதுதவிர கார்கிலில் இருந்து கர்வாலி ஆப்பிள்கள் மற்றும் அப்ரிகாட் பழங்கள் சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தொடர்புடைய தனித்துவமான தரம் கொண்ட பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது
தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி எலுமிச்சைக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரலில் புவிசார் குறியீடு வழங்கியது.

