ஐ.பி.எல்., போட்டி நெருங்கும் சூழலில் விளம்பர ஏஜன்சிகளில் விடிய விடிய ரெய்டு
ஐ.பி.எல்., போட்டி நெருங்கும் சூழலில் விளம்பர ஏஜன்சிகளில் விடிய விடிய ரெய்டு
ADDED : மார் 19, 2025 11:41 PM

புதுடில்லி:ஜப்பானைச் சேர்ந்த 'டென்ட்சு' உட்பட முன்னணி சர்வதேச ஊடக விளம்பர ஏஜன்சி நிறுவனங்களில், இந்திய போட்டி ஆணைய அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர்பப்ளிக், ஜப்பானின் டென்ட்சு மற்றும் முன்னணி விளம்பர ஒப்பந்த நிறுவனங்களான 'ஐ.பி.டி.எப்., குரூப்எம்., பப்ளிசைஸ்' ஆகியவற்றின் அலுவலகங்களில், சி.சி.ஐ., ஆய்வாளர்கள் செவ்வாய் கிழமை அதிகாலை புகுந்தனர்.
இரவு வரை நீடித்த ரெய்டில், நிறுவனங்களின் உயரதிகாரிகள் யாரும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தகவல்
விடிய விடிய 10 இடங்களில் நடந்த ஆய்வில், ஊடகங்களுக்கு விளம்பர ஒப்பந்தம் செய்வதில் டென்ட்சு உள்ளிட்ட சர்வதேச ஏஜன்சிகளில் நடைபெறும் முறைகேடு புகார் தொடர்பான ஆவணங்களை, சி.சி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகிஉள்ளது.
அதிரடி
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், விளம்பர ஒப்பந்தத்துக்கான சர்வதேச ஏஜன்சிகளின் அலுவலகங்களில், போட்டி ஆணையம் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் 'ரிலையன்ஸ் டிஸ்னிஹாட்ஸ்டார், சோனி' ஆகியவற்றின் விளம்பர ஒப்பந்தங்களை கையாளும் ஐ.பி.டி.எப்., அலுவலகத்தில், சி.சி.ஐ., ஆய்வாளர்கள் நடத்திய ரெய்டில், விளம்பர ஒதுக்கீடு தொடர்பான இ - மெயில்களை ஆராய்ந்தனர்.
உலகின் 8வது மிகப்பெரிய விளம்பர சந்தையாக உள்ளது இந்தியா
ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சி காணும் இந்திய விளம்பர சந்தையின் மதிப்பு 1.50 லட்சம் கோடி ரூபாய்.