பயணியர், சரக்குகள் இரண்டுக்கும் ஒரே ரயில் 'டபுள் டெக்கர்' தயாரிப்பில் ரயில்வே மும்முரம்
பயணியர், சரக்குகள் இரண்டுக்கும் ஒரே ரயில் 'டபுள் டெக்கர்' தயாரிப்பில் ரயில்வே மும்முரம்
ADDED : நவ 07, 2024 11:15 PM

புதுடில்லி:ஒரே நேரத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையிலான, 'டபுள் டெக்கர்' ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதலாவது சில ரயில்களை சோதனை ஓட்டம் பார்க்க ரயில்வே தயாராகி வருவதாக, டில்லியில் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த டபுள் டெக்கர் கார்கோ ரயிலின் முதல் அடுக்கில், 6 டன் வரை எடையுள்ள சரக்குகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மேல் அடுக்கில், ஒரு பெட்டிக்கு 46 பயணியர் அமரும் வகையில் வசதி இருக்கும்.
நாட்டிலேயே முதல்முறையாக, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ஒரே ரயிலாக இது இருக்கும்.
இதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்துக்கென தனி ரயில்களின் தேவை குறைவதுடன், பயணியரும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்ல கூடுதல் சேவை கிடைக்கும் என ரயில்வே கருதுகிறது.
டபுள் டெக்கர் கார்கோ ரயில்கள் தயாரிப்பு வேகம் பெற்று வரும் நிலையில், விரைவில் சில ரயில்களை சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்க ரயில்வே தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 'வந்தே கார்கோ' என்ற பெயரில், பிரத்யேகமாக சரக்கு போக்குவரத்துக்கென, அதிக சரக்குகளை சுமந்து, அதிவேகமாக செல்லக்கூடிய ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன.
இந்த சரக்கு ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக்கூடியவை என்பதால், சரக்கு போக்குவரத்து விரைவாக நடைபெறும்.
இந்த ரயில் பெட்டிகள், கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் டிசைன் செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில்வே உயரதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும், தயாரிப்பு பணிகள் துவங்கப்படவுள்ளன.
16 - 20 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும்
ரயில் பெட்டியின் மேல் அடுக்கில் 46 பேர் பயணிக்கலாம்
ரயிலில் ஒரு பெட்டி உணவகமாக செயல்படும்
ஒரு பெட்டி தயாரிக்க செலவு 5 கோடி ரூபாய்
சரக்கு போக்குவரத்து
159.10 கோடி டன்
2023 - 24ல் ரயில்வே கையாண்ட சரக்குகள்
5%
ஆண்டு அதிகரிப்பு
28%
மொத்த சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கு