'வளர்ந்த இந்தியா இலக்கை அடைய கடும் சவால்களை சந்திக்க வேண்டும்' ரங்கராஜன் யோசனை
'வளர்ந்த இந்தியா இலக்கை அடைய கடும் சவால்களை சந்திக்க வேண்டும்' ரங்கராஜன் யோசனை
ADDED : அக் 29, 2025 03:22 AM

சென்னை:நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் நுாற்றாண்டான 2047ல் மக்கள்தொகை 162 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதில் அதிக சவால்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், வளர்ந்த இந்தியா 2047 என்ற இலக்கில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து தெரிவித்ததாவது:
இலக்கை அடைய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 30 லட்சம் கோடி டாலராக அதிகரிக்க வேண்டும்; அதற்கான வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்தியாவின் சராசரி வளர்ச்சி தற்போது 6.2 சதவீதமாக உள்ளது; வேகமாக வளரும் 6 மாநிலங்களை தவிர்த்து, மந்தமாக உள்ள மாநிலங்கள் 17 சதவீதம் வளர வேண்டும்.
வறுமை விகிதம் 4 சதவீதமாக குறைந்திருப்பது சாதகமான அம்சம் என்றாலும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய முதலீடுகளை 2 சதவீதம் உயர்த்துதல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல், வேலைவாய்ப்பில் அதன் தாக்கத்தை சமாளித்தல் ஆகியவை சவாலானவை.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதும் மிக முக்கியம். வளர்ச்சியும், சமத்துவமும் இணைந்தே பயணிப்பது இதற்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

