ADDED : செப் 07, 2025 01:49 AM

கோவை:'கொடிசியா'வில், 'ரா மேட் 2025' மூலப்பொருள் கண்காட்சி, செப்., 11ல் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “ரா மேட் மூலப்பொருள் மற்றும் ஆதார வளங்கள் கண்காட்சி, 4வது பதிப்பாக, செப்., 11ல் துவங்கி, 3 நாட்கள் நடக்கிறது.
''இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த நிலையில், வரவேற்பு, தேவையை கருத்தில் கொண்டு ஓராண்டு இடைவெளியில் நடத்தப்படுகிறது. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து மூலப்பொருளை பெற்று, தங்களின் மூலதன செலவை குறைக்கும் வகையில், இக்கண்காட்சி நடைபெறுகிறது,” என்றார்.
கண்காட்சி தலைவர் சரவணகுமார் கூறியதாவது:
இரும்பு, எஃகு, உலோக பவுண்டரிகள், இன்காட், டார் ஸ்டீல், பிளாஸ்டிக் உதிரி பாகம், ஆட்டோமொபைல், கட்டுமானம், உலோக மேற்பூச்சு, மரப்பொருள், சிப்பமிடல், ரசாயனம், ஆட்டோமொபைல் பாடி, கொள்கலன், தொழிற்சாலை பயன்பாட்டுக்கான காஸ், ரப்பர் உதிரி பாகங்கள் என, அனைத்து வித மூலப்பொருட்கள், கிடங்கு, போக்குவரத் து வசதிகள் என தொழிற்சாலைகளுக்கான அனைத்து மூலப்பொருட்களை ஒரே கூரையின் கீழ் தேர்வு செய்ய முடியும்.
குஜராத், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, தமிழகத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், டீலர்கள் பங்கேற்கின்றனர். 25 உற்பத்தி நிறுவனங்களுக்கு, சிட்பி மானியம் அளிக்கிறது. அனுமதி இலவசம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.