நிதி பற்றாக்குறை 4.20 சதவிகிதம் ஆக குறைய உதவிய ஆர்.பி.ஐ.,
நிதி பற்றாக்குறை 4.20 சதவிகிதம் ஆக குறைய உதவிய ஆர்.பி.ஐ.,
ADDED : மே 25, 2025 12:18 AM

புதுடில்லி:ரிசர்வ் வங்கி அரசுக்கு வழங்கவுள்ள 2.69 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை காரணமாக, நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 4.20 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக எஸ்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான ஈவுத்தொகை வருவாயாக, மத்திய அரசுக்கு 2.69 லட்சம் கோடி ரூபாயை வழங்க, ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 2.56 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை கிடைக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில், ரிசர்வ் வங்கி மட்டுமே 2.69 லட்சம் கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதாரத்தில் 4.40 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, இது 4.20 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மாறாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நலத்திட்டங்கள் போன்றவற்றில் அரசின் செலவினம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு இடையே, ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை வருவாய் அரசுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்று எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.