ரியல் எஸ்டேட் பொய் விளம்பரங்கள்: அபராதம் வசூலிக்க வலியுறுத்தல்
ரியல் எஸ்டேட் பொய் விளம்பரங்கள்: அபராதம் வசூலிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2025 07:16 AM

புதுடில்லி : பொய் தகவல்களைக் கூறும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீடு வாங்குவோர் நல கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
'போரம் பார் பீப்பிள்ஸ் கலெக்டிவ் எபர்ட்ஸ், நாடு தழுவிய வீடு வாங்குவோர்களின் வக்கீல் குழு' உள்ளிட்ட கூட்டமைப்பினர், வீடு வாங்குவோருக்கு தவறான வழிகாட்டும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்து, கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு தீர்வு காண, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தை அணுகியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் மஹாராஷ்டிராவில், ரியல் எஸ்டேட் துறையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 34 சதவீத விளம்பரங்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை மீறியுள்ளன. இது மஹாராஷ்டிராவில் நடந்திருந்தாலும், நாடு முழுதும் இந்த பிரச்னை பரவலாக உள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும், தவறான வழிகாட்டும் விளம்பரங்களால் பாதிக்கப்பட்டோர் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறுவதற்கோ அல்லது இழப்பீடு பெறுவதற்கோ தற்போது எந்த வழியும் இல்லை.
ஆகையால், வீடு வாங்குபவர்களை பாதுகாப்பதற்கும், தவறு செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடுமையான, அதிகபட்ச அபராதத்தை உறுதி செய்வதற்கும் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என, கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

