தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை விலை குறைப்பு
தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை விலை குறைப்பு
ADDED : நவ 02, 2025 12:16 AM

மும்பை,:தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை விலையை மத்திய அரசு மாற்றியமைத்திருக்கிறது. இதன்படி, 10 கிராம் தங்கத்துக்கு 42 டாலர் வரையிலும், ஒரு கிலோ வெள்ளிக்கு 107 டாலர் வரையிலும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
உலகம் முழுதும் தங்கம், வெள்ளியின் விலை அதிக அளவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் சூழலில், உள்நாட்டில் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நம்நாட்டின் தங்கம், வெள்ளி வணிகத்துக்கும் இது பெரிதும் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, அடிப்படை இறக்குமதி விலை என்பது சுங்கவரி மற்றும் இறக்குமதி வரியை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதை குறைப்பதன் வாயிலாக தங்கம், வெள்ளி இறக்குமதியாளர்களுக்கு வரிச்சுமை ஓரளவுக்கு குறையும்.
அதன் எதிரொலியாக உள்நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையிலும் விலைவாசி சமன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அவ்வப்போது இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து, தங்கம், வெள்ளி விலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உள்நாட்டுச் சந்தையை ஒழுங்குபடுத்தும்.
இதன் விளைவாக நகை விற்பனையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என்று எல்லோருக்குமே பயன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நுகர்வோருக்கு என்ன?
கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற இறக்கம் காணும் விலை, கட்டுப்பாட்டுக்குள் வரும்
இறக்குமதியாளர்களின் சுங்க வரிச்சுமை குறைவதால், உள்நாட்டு விலை குறைய வாய்ப்பு

