ADDED : செப் 07, 2025 01:48 AM

சென்னை:தொழில்முனைவோரின் கோரிக்கையை ஏற்று, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பம் உள்ளிட்ட கட்டணங்களை குறைக்க, தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டையை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
இந்நிறுவனம், மனை ஒதுக்கீட்டிற்கு அதற்குஉரிய விலையை தவிர்த்து, விண்ணப்ப கட்டணம், பரிசீலனை கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை வசூலிக்கிறது. இந்த கட்டணங்களை குறைக்குமாறு சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், கடந்த வாரத்தில் நடந்த, 'சிட்கோ' நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டத்தில் குறுந்தொழில்களுக்கான விண்ணப்பம், பரிசீலனை கட்டணங்களை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, தற்போது குறுந்தொழில்களுக்கு, 5,000 ரூபாயாக உள்ள விண்ணப்ப கட்டணம், 2,000 ரூபாயாகவும்; 15,000 ரூபாயாக உள்ள பரிசீலனை கட்டணம், 5,000 ரூபாயாகவும் குறைக்கப்பட உள்ளன. கட்டண குறைப்பு தொடர்பான முழு விபரங்களும் இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
குறுந்தொழில்களுக்கு, 5,000 ரூபாயாக உள்ள விண்ணப்ப கட்டணம், 2,000 ரூபாயாகவும்; 15,000 ரூபாயாக உள்ள பரிசீலனை கட்டணம், 5,000 ரூபாயாகவும் குறைக்கப்பட உள்ளன