ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகை பெற பதிவு சான்றிதழ் கட்டாயமில்லை
ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகை பெற பதிவு சான்றிதழ் கட்டாயமில்லை
ADDED : அக் 10, 2024 01:27 AM

புதுடில்லி:'மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களின் நன்மையை பெற, இந்திய ஏற்றுமதியாளர்கள் பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் கட்டாயமில்லை' என, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் தெளிவுப்படுத்தி உள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியை திரும்ப பெறுவது, ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது.
வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி, இந்த நிவாரண திட்டங்களின் நன்மையை பெற, ஆர்.சி.எம்.சி., எனப்படும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் தேவைப்படுகிறது.
இந்த சான்றிதழ் வைத்திருப்போருக்கு சுங்க மற்றும் கலால் வரியில் இருந்து சலுகைகள் கிடைக்கின்றன. இதனை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் ஏற்றுமதி பொருட்கள் வாரியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான மத்திய, மாநில வரி விதிப்பில் தள்ளுபடி, ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு போன்ற திட்டங்களுக்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் பொருந்தாது.
ஏற்றுமதியாளர்கள் இந்த சான்றிதழ் இன்றியும், பல்வேறு திட்டங்களின் நன்மையை பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.