ஆர்.ஐ.எல்., வணிகத்தை விஞ்சும் ரிலையன்ஸ் ஜியோ, ரீடெய்ல்
ஆர்.ஐ.எல்., வணிகத்தை விஞ்சும் ரிலையன்ஸ் ஜியோ, ரீடெய்ல்
ADDED : ஜூன் 12, 2025 12:18 AM

புதுடில்லி,:ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தை பின்தள்ளி, நுகர்வோருடன் நேரடி தொடர்பு உள்ள ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கு மேல் இடம் பிடித்துள்ளன.
இதுகுறித்து ஜே.பி.மார்கன் அறிக்கையில் கூறியதாவது:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு இயக்க லாபத்தில் நுகர்வோர் பிரிவுகளான ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகியவை 54 சதவீத பங்கு வகிக்கின்றன. இது 2016-17ம் நிதியாண்டில் வெறும் 4 சதவீதமாக இருந்தது.
கடந்த 2024-25ம் நிதியாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வட்டி, வரி, தேய்மான கழிப்புக்கு முந்தைய இயக்க லாபம் 1.65 லட்சம் கோடி ரூபாய். இதில் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் பங்கு 54 சதவீதமாக உள்ளது.
ஜியோ மற்றும் ரீடெய்ல் நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியால், 2027-28ல், 2.16 லட்சம் கோடி ரூபாயாக இது அதிகரிக்கும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு சேவையில் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கும் நிலையில், சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் மற்றும் மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.