'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முன்கூட்டியே இலக்கு எட்டப்பட்டது'
'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முன்கூட்டியே இலக்கு எட்டப்பட்டது'
ADDED : டிச 08, 2025 01:59 AM

புதுடில்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் திட்டமிட்ட இலக்கில் 50 சதவீதத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா எட்டிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 259 ஜிகாவாட் ஆகும்.
இதில் 31.20 ஜிகாவாட், நடப்பு நிதியாண்டில் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. பாரீஸ் காலநிலை மாநாடு உடன்படிக்கையின்படி தேசிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கில் 50 சதவீதத்தை, நாம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிவிட்டோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கடன் அளிப்பதை நிறுத்தி வைக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியதாகப் பரவிய தகவலில் உண்மை இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பி.எப்.சி., - ஆர்.இ.சி., ஐ.ஆர்.இ.டி.ஏ., உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், நிதிச்சேவைகள் துறைக்கும் அமைச்சகம் முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதில், நாட்டின் சூரிய மின் உற்பத்தி திறன் நிலவரத்தை அறிந்து கடனுதவி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சோலார் மாட்யூல்களுக்கு கடனுதவி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் சோலார் தகடுகள், சோலார் செல்கள், இன்காட் வேபர், பாலி சிலிகான் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உற்பத்திக்கும் கடனுதவியை விரிவுபடுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்திஉள்ளது.
கடனுதவி எச்சரிக்கை நடந்தது என்ன?
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது
* சூரிய மின்சக்தி மாட்யூல் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான கடனுதவி விண்ணப்பங்கள் குறித்த அறிக்கை இது
* அவற்றைக் கையாளும்போது 'சரியான, தெளிவான தகவல்களுடன்கூடிய' அணுகுமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தியிருந்தது
* தேவையைவிட, வினியோகம் அதிகரிக்கக்கூடாது என விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்திருந்தது
* ஆனால், எல்லா சூரிய எரிசக்தி திட்டங்களுக்கும் கடனுதவி கூடாது என்று ஊடக செய்தி வெளியானது
* இதை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், கடனுதவிகளை உதிரிபாக உற்பத்திக்கும் விரிவுபடுத்த கேட்டுக்கொண்டுள்ளது.

