'2ஜி - 3ஜி' சேவைகளை முடக்க 'ஜியோ' அரசிடம் கோரிக்கை
'2ஜி - 3ஜி' சேவைகளை முடக்க 'ஜியோ' அரசிடம் கோரிக்கை
ADDED : ஜன 31, 2024 12:16 AM

புதுடில்லி:நாட்டில் '2ஜி' மற்றும் '3ஜி' சேவைகளை முடக்குமாறு, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
'டிராய்' எனும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், '5ஜி சுற்றுச்சூழல் வாயிலாக டிஜிட்டல் மாற்றம்' என்ற தலைப்பில் ஓர் ஆலோசனை அறிக்கையை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது.
இது, புதிய தொழில்நுட்பங்களை துரிதமாக ஏற்றுக்கொள்வதற்கும், அவற்றை திறம்பட பயன்படுத்துவதற்கும் பயனுள்ள ஒரு கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
தற்போது இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், நாட்டில் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை முடக்குமாறு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை முழுமையாக முடக்குவதற்கான, தெளிவான கொள்கை மற்றும் பாதையை வகுப்பதில், கவனம் செலுத்த வேண்டும். இந்த கொள்கையை அரசு கொண்டு வர வேண்டும், இதனால் தேவையற்ற நெட்வொர்க் செலவுகள் தவிர்க்கப்படும்.
மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு மாற்றப்பட வேண்டும். இது, 5ஜி பயன்பாடு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு பெரும் உத்வேகம் அளிக்கும்.
மேலும் 5ஜி சேவையின் பயன்பாடு, பல்வேறு தொழில்களில் டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வருவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா
நாட்டில் பெரும்பான்மையான மக்கள், பழைய தொழில்நுட்பமான 2ஜி சேவையையே பயன்படுத்துகின்றனர். புதிய தலைமுறை தொழில்நுட்பங்களான 4ஜி, 5ஜி இணைப்புகள் உள்ள போதிலும், அதனை அவர்களால் அணுக முடியவில்லை. ஸ்மார்ட்போன்களின் விலை காரணமாக, 4ஜி, 5ஜி சேவைகளுக்கு பயனர்கள் மாற இயலாதது, அவர்களை பழைய தொழில்நுட்பத்திலேயே தொடர்வதற்கு வழிவகுக்கிறது என, வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.