ADDED : செப் 24, 2026 11:55 PM

புதுடில்லி: சர்வதேச சந்தையில், காப்பர் எனப்படும் தாமிர வி லை அதிக அளவில் உயர்ந்து வருவதை அடுத்து, தாமிரம் மீதான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம், இந்திய முதன்மை தாமிர உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ரோஹித் பதக் கூறியதாவது: லண்டன் உலோக சந்தையில் தாமிரம் விலை ஒரு டன் கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தாமிரம் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களை வாங்கும் முதன்மை உற்பத்தியாளர்கள் முதல், அதன் துணை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வரை அனைவரும் தொடக்கத்திலேயே 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், நிறுவனங்களின் நடைமுறை மூலதனத்தில் கணிசமான தொகை வரியிலேயே முடங்குகிறது. எனவே, பல்வேறு வகையான தாமிர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், வரியில் முடங்கியிருக்கும் 30,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும். ஹிண்டால்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், தங்களின் உற்பத்தி விரிவாக்கத்துக்கு இந்நிதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
