சமையல் எண்ணெய் பேக்கிங் விதியை மாற்ற அரசுக்கு கோரிக்கை
சமையல் எண்ணெய் பேக்கிங் விதியை மாற்ற அரசுக்கு கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 01:06 AM

புதுடில்லி:சந்தையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதுடன், நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில், சமையல் எண்ணெய் பேக்கிங்கில் முன்பிருந்த, நிலையான அளவுகளை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு, இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் 1 யூனிட் விற்பனை விலையை குறிப்பிடுவது, 2021ம் ஆண்டு எடையளவு சட்ட திருத்தத்தின்படி கட்டாயம்.
அதேநேரம், சமையல் எண்ணெய் பேக்கிங் செய்வதில் 5 கிலோ, 2 கிலோ, 1 கிலோ, 500 கிராம், 200 கிராம் ஆகிய அளவுகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், 2022ம் ஆண்டு எடையளவு சட்ட திருத்தத்தில், குறிப்பிட்ட அளவுகளில் பொருட்களை பேக்கிங் செய்யும் விதி கைவிடப்பட்டது. இதனால், சந்தையில் நிலையற்ற பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் பெருகி வருகின்றன.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் ஒரே மாதிரியாக தோற்றமளிப்பதால், வெவ்வேறு எடைகளில் அவை இருப்பதால், நுகர்வோர் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். யூனிட் விற்பனை விலையை குறிப்பிட்டாலும், நிகர எடையில் நிலவும் வித்தியாசத்தை கவனத்தில் கொள்ள முடியாமல் போகிறது.
எனவே, அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் எண்ணெய் தொடர்பான விபரங்கள் நுகர்வோருக்கு தெளிவாக புரியும் வகையில் முன்னர் இருந்தது போன்று, நிலையான பேக்கிங் அளவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

