ADDED : ஏப் 15, 2025 10:51 PM

சென்னை:'சென்னையில் உள்ளதைப் போல் மற்ற இடங்களிலும், 'ஆர் அண்டு டி' மையங்கள் அமைய உள்ளன. இது, இரண்டாம் நிலை நகரங்களின் வலிமையை காட்டுவதாக அமையும்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்சியில், 'ஜாபில்' நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தற்போது உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும், 'டீப் டெக்' எனும் ஆழ்தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள தைவான் நாட்டை சேர்ந்த, 'புல் செயின்' நிறுவனம், திருச்சியில் வடிவமைப்பு அலுவலகத்தை திறந்துள்ளது.
அடுத்து, அண்ணா பல்கலை திருச்சி வளாகத்தில், உலகளாவிய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்னையைப் போல் மற்ற இடங்களிலும் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைய உள்ளன.
இது, மகிழ்ச்சி அளிப்பதுடன், திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களின் வலிமையை காட்டுவதாகவும் உள்ளது. இதை, வேறு எந்த மாநிலமும் வழங்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

