விவசாயம், சிறுதொழிலுக்கு தங்க நகைக்கடன் வழங்கலாம் விதிமுறை குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம்
விவசாயம், சிறுதொழிலுக்கு தங்க நகைக்கடன் வழங்கலாம் விதிமுறை குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம்
ADDED : ஜூலை 12, 2025 10:01 PM

மும்பை:தங்கம், வெள்ளியை அடமானமாக பெற்று கொண்டு, வங்கிகள், விவசாய, சிறு நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்குவது, விதிமுறைகளை மீறுவது ஆகாது, என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
கடன் வகைப்படுத்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆய்வு குழுக்கள் இடையே மாறுபட்ட கருத்து எழுந்தது.
ஆய்வாளர்களில் ஒரு தரப்பினர், தங்கம், வெள்ளியை அடமானமாக ஈடாக எடுத்து கொள்ளும்பட்சத்தில், அவற்றை முன்னுரிமை பிரிவு கடன்கள் அடிப்படையில், விவசாய கடன் மற்றும் சிறு தொழில் கடன் என வகைப்படுத்தக் கூடாது என்ற வாதத்தையும்; மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள், தங்கம், வெள்ளியை அடமானமாக எடுத்துக் கொண்டாலும், பிணை இல்லாத வரம்பு வரை, விவசாய மற்றும் சிறு தொழில் கடன்களாக வகைப்படுத்தலாம் என்ற வாதத்தையும் முன்வைத்தனர்.
இது தொடர்பாக ஆர்.பி.ஐ., அளித்த விளக்கம்:
கடன் வாங்குவோர், தாமாக முன் வந்து தங்கம், வெள்ளியை அடமானமாக அளித்தாலும், பிணையற்ற வரம்பு வரை வங்கிகள் கடன்களை வழங்கலாம்.
இது பிணையில்லாத விவசாய கடன்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ., பிரிவுக்கு கடன் வழங்குதல் ஆகிய தொடர்புடைய வழிகாட்டுதல்களை மீறுவதாக கருதப்படாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
இரண்டு லட்சம் ரூபாய் வரை பிணையற்ற விவசாய கடனாகவும்; சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அடமானம் இன்றி கடன்களை வழங்கி வருகின்றன.