ADDED : பிப் 13, 2024 05:05 AM

புதுடில்லி : சில்லரை விலை பணவீக்க விகிதம் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரி யில் 5.10 சதவீதமாக குறைந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான இந்த பணவீக்க விகிதம் கடந்தாண்டு டிசம்பரில் 5.69 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜனவரியில், 6.52 சதவீதமாகவும் இருந்தது.
இது கடந்த ஆகஸ்டில் அதிகபட்சமாக, 6.83 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை சற்று சரிந்ததே ஜனவரி மாதத்தில் பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
வட்டி விகிதம்
கடந்த டிசம்பர் மாதத்தில் 9.53 சதவீதமாக பதிவாகியிருந்த உணவுப் பிரிவு பணவீக்கம் ஜனவரி யில், 8.30 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரிவில் பணவீக்கம் முறையே 4.20 சதவீதமும், 2 சதவீதமும் குறைந்த அளவில் பதிவானது. எனினும் முட்டை, தானியங்கள் ஆகியவற்றில் பணவீக்கம் சற்றே அதிகரித்திருந்தது.
ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கத்தை, 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துஉள்ளது.
இந்த வகையில், ஜனவரி மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஐந்து மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் பராமரிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை உற்பத்தி
நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டு டிசம்பரில், 3.80 சதவீதமாக இருந்தது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக இருந்தது.
இது கடந்தாண்டு நவம்பரில், 2.40 சதவீதமாக மிகவும் குறைந்திருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 6.10 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.50 சதவீதமாக இருந்தது.
கடந்தாண்டு நவம்பரில், 1.20 சதவீதமாக இருந்த தயாரிப்பு துறை உற்பத்தி டிசம்பரில் 3.90 சதவீதமாக அதிகரித்தது.
எனினும், மின்சாரத்துறை உற்பத்தி, 5.80 சதவீதத்தில் இருந்து 1.20 சதவீதத்துக்கும், சுரங்கத்துறை உற்பத்தி, 7 சதவீதத்தில் இருந்து, 5.10 சதவீதத்துக்கும் குறைந்து உள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.