ADDED : ஏப் 15, 2025 11:41 PM

புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்கம், கடந்த மார்ச்சில் 3.34 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆகஸ்ட்டுக்கு பின் அதாவது, 67 மாதங்களில் இதுவே குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும். அப்போது பணவீக்கம், 3.28 சதவீதமாக இருந்தது.
காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பிப்ரவரியில் 3.75 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பிரிவு பணவீக்கம், மார்ச்சில் 2.69 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த 2021 நவம்பர் மாதத்துக்கு பின் குறைவாகும்.
கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச்சில், இஞ்சி, தக்காளி, காலிபிளவர், பூண்டு ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், தேங்காய் எண்ணெய், தேங்காய், தங்கம், வெள்ளி, திராட்சை ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இதனிடையே கடந்த மாதம், நகர்ப்புறங்களில் பணவீக்கம் 3.43 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 3.25 சதவீதமாகவும் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் வந்துள்ளதால், வரும் மாதங்களில் வங்கிக் கடன் வட்டியான ரெப்போ விகிதம் மேலும் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

