மீண்டும் எகிறியது சில்லரை விலை பணவீக்கம் 13 மாதங்களில் இல்லாத உயர்வு
மீண்டும் எகிறியது சில்லரை விலை பணவீக்கம் 13 மாதங்களில் இல்லாத உயர்வு
ADDED : நவ 13, 2024 12:46 AM

புதுடில்லி:உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத வகையில், அக்டோபரில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாகவும்; கடந்தாண்டு அக்டோபரில் 4.87 சதவீதமாகவும் இருந்தது.
இதையடுத்து, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் வரம்புக்குள் இருந்த சில்லரை விலை பணவீக்கம், மீண்டும் அந்த வரம்பை மீறியுள்ளது. உணவுப் பொருட்கள் குறிப்பாக, காய்கறிகள் விலை அதிகரித்ததே ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.
கடந்த செப்டம்பரில் 35.99 சதவீதமாக இருந்த காய்கறிகள் பிரிவு பணவீக்கம், அக்டோபரில் 42.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் 9.24 சதவீதத்திலிருந்து 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்திருப்பதால், டிசம்பரில் ரிசர்வ் வங்கி, கடன் வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு மங்கி விட்டதாக, பணச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.