உயர்ந்து வரும் தங்க இ.டி.எப்., முதலீடு உலக தங்க கவுன்சில் தகவல்
உயர்ந்து வரும் தங்க இ.டி.எப்., முதலீடு உலக தங்க கவுன்சில் தகவல்
UPDATED : செப் 07, 2025 11:10 PM
ADDED : செப் 07, 2025 11:08 PM

மும்பை:தங்க இ.டி.எப்.,களில் செய்யப்படும் இந்தியர்களின் முதலீடுகள், கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக அளவிலும் தங்க இ.டி.எப்., களில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக உயர்ந்துள்ளதையும் இந்த கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
![]() |
மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆகஸ்டு மாதம், ஆசிய நாடுகளில் இருந்து, தங்க இ.டி.எப்.,களில் செய்யப்படும் முதலீடுகள் சற்றே குறைந்தது. அதற்கு சீனாவே பிரதான காரணம்.
அந்நாட்டில், பங்குச் சந்தை வலு அடைந்ததால், தங்க இ.டி.எப்., முதலீடுகள் குறைந்தன. ஆனால், இந்தியாவிலோ, தங்க இ.டி.எப்.,களில் பல நிறுவனங்களும், தனிநபர்களும் முதலீடு செய்வதை தொடர்ந்து செய்து வந்தனர்.
குறிப்பாக, சர்வதேச அளவில் வர்த்தகப் போர், ராணுவ ரீதியான போர்கள் நடைபெறுவதால், நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. முதலீட்டாளர்கள் வெளியேறுகின்றனர். அதனால், இந்திய பங்குச் சந்தை முதலீடுகள் போதிய லாபத்தை ஈட்டித் தரவில்லை. இந்த நேரத்தில், முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்பதால், தங்க இ.டி.எப்.,களின் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை, தங்கத்தின் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மட்டுமல்ல; உலக நாடுகள் பலவற்றிலும் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து உள்ளன.
வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டு பண்டுகள், தங்க இ.டி.எப்., முதலீடுகளை அதிகரித்தே வருகின்றன. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஆகஸ்டு மாதம் தங்க இ.டி.எப்.,களின் சேமிப்புகளின் பின்னால் இருக்கும் மொத்த தங்க இருப்பு 53 டன் உயர்ந்து, 3,692 டன்கள் என்ற அளவை எட்டியுள்ளது. ஜூலை 2022க்குப் பிறகு இவ்வளவு தங்கம் இருப்பு வைக்கப்படுவது இதுவே முதல் முறை.
![]() |
வட அமெரிக்க நிதி நிறுவனங்கள், ஆகஸ்டில் மட்டும் 36,150 கோடி ரூபாய் அளவுக்கு தங்கத்தை வாங்கிச் சேமித்தன. ஐரோப்பிய பண்டுகளும்16,752 கோடி ரூபாய் அளவுக்கு தங்கத்தை வாங்கின. குறிப்பாக பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் இதில் முன்னிலை வகித்தன.
சுவிட்சர்லாந்து மீது 39 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டதை அடுத்து, அந்நாடும் தங்க இ.டி.எப்., முதலீடுகளை அதிகரித்தது.
ஜெர்மனியில், இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளதை அடுத்து, அங்கே பொருளாதார மந்தநிலை உருவாகலாமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், தங்க முதலீடு அதிகரித்துள்ளது. பிரிட்டனிலும் இதே சூழல் தான்.
நேற்றய மாலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,592.50 டாலரைத் தொட்டுவிட்டது. இந்திய மல்டி கமாட்டிட்டி சந்தையில், 10 கிராம் தங்கத்தின் அக்டோபர் யூக வணிக விலை 1,07,807 ரூபாயைத் தொட்டு உள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்பதால், தங்க இ.டி.எப்., களில் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது