ஆடைகளுக்கான பிரின்டிங் வசதி கோவையில் ரெடியாகும் ரோபோ
ஆடைகளுக்கான பிரின்டிங் வசதி கோவையில் ரெடியாகும் ரோபோ
ADDED : ஏப் 20, 2025 12:08 AM

திருப்பூர்:தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், தானியங்கி டிஜிட்டல் பிரின்டிங் ரோபோ இயந்திரங்களை தயாரிக்க, திருப்பூர் பின்னலாடை துறையினர் களமிறங்கியுள்ளனர்.
பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பில், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் தொழில்நுட்பம் அத்தியாவசியமானது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு, பிரின்டிங் தொழில்நுட்பம் அவசியமாகவும் மாறியுள்ளது.
திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
நவீன தொழில்நுட்பத்தில், 'டிஜிட்டல்' பிரின்டிங் அறிமுகமாகியுள்ளதால், செலவு குறைவதோடு, உற்பத்தியையும் அதிகரிக்க முடிகிறது.
இதற்கேற்ப அதிநவீன இயந்திரம் தயாரிக்க, 'டெக்பா' ஆராய்ச்சி செய்து வருகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரின்டிங் துறையை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின், தானியங்கி பிரின்டிங் 'ரோபோ' போல் இந்தியாவில் இயந்திரங்கள் இல்லை.
சீன தொழில்நுட்பத்தை பின்பற்றி, சிலவகை பாகங்களை மட்டும் இறக்குமதி செய்து, கோவையிலேயே, 'ரோபோ' போன்ற பிரின்டிங் இயந்திரம் வடிவமைப்பதற்கான ஆராய்ச்சி நடந்து முடிந்துள்ளது. அடுத்தநான்கு மாதங்களுக்குள், இத்தகைய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு, ஸ்ரீகாந்த் கூறினார்.

