'ரோக்கா' நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு: ஸ்பெயினில் முதல்வரிடம் உறுதி
'ரோக்கா' நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு: ஸ்பெயினில் முதல்வரிடம் உறுதி
ADDED : பிப் 01, 2024 12:22 AM

சென்னை: ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினிடம், அந்நாட்டின் 'ரோக்கா' நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீட்டில், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவ உறுதி அளித்துள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக, ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டில் கடந்த 29ம் தேதி நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டில், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன், முதல்வர் கலந்துரையாடினார்.
எரிசக்தி
நேற்று முன்தினம் அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வரை நேரில் சந்தித்து பேசினர்.
'ஆக்சியானா' நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மாடியோ, நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் மான்யூல் மன்ஜன் வில்டா ஆகியோர், முதல்வரை சந்தித்து பேசினர்.
'தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறு சுழற்சியிலும், இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இத்துறையில் பல முக்கிய நிறுவனங்கள், தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுகின்றன.
'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக் கொள்கையை, தமிழக அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் ஆக்சியானா நிறுவனத்தின் முதலீட்டிற்கு, உகந்த இடமாக தமிழகம் இருக்கும்' என, முதல்வர் எடுத்துரைத்தார்.
கலந்தாலோசனை முடிவில், தமிழகத்தில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய, ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்தது.
அதன்பின், பீங்கான் மற்றும் வீட்டு கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியில், உலக அளவில் முன்னணியாக திகழும், 'ரோக்கா' நிறுவனத்தின் சர்வதேச இயக்குனர் கார்லோஸ் வெலாஸ்கியூஸ், இந்திய இயக்குனர் நிர்மல்குமார் ஆகியோர், முதல்வரை சந்தித்து பேசினர்.
புதிய தொழிற்சாலை
ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் தற்போது பெருந்துறை மற்றும் ராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் விற்பனையை, இந்தியாவில் உயர்த்த, சர்வதேச ஏற்றுமதிக்காக, இதன் விரிவாக்கத்தையும், புதிய தொழில் அலகுகளையும், தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
தொழில் துறை அமைச்சர் ராஜா, இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும், தமிழகத்தில் நிலவி வரும் சாதகமான சூழல் குறித்து விளக்கினார். சந்திப்பு முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக, உறுதி அளித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும், புதிய தொழிற்சாலை அமைக்கவும், ராணிப்பேட்டையிலும், பெருந்துறையிலும் தற்போது செயல்படும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும், ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
இதனால், 200 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இச்சந்திப்புகளின்போது, வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு உடனிருந்தார்.