மசாலா, மாவு பொருள் தரத்தை உறுதி செய்ய மதுரையில் ரூ.11 கோடியில் பகுப்பாய்வு மையம் தென்மாவட்டத்தினர் சென்னைக்கு வர தேவையில்லை
மசாலா, மாவு பொருள் தரத்தை உறுதி செய்ய மதுரையில் ரூ.11 கோடியில் பகுப்பாய்வு மையம் தென்மாவட்டத்தினர் சென்னைக்கு வர தேவையில்லை
ADDED : டிச 27, 2024 01:18 AM

சென்னை:உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மதுரையில், 11 கோடி ரூபாயில் பகுப்பாய்வு கூடத்தை, டி.என்.எபெக்ஸ் நிறுவனம் அமைக்கிறது.
தமிழகத்தில் மசாலா பொருட்கள், மாவு வகைகள், சிறுதானிய உணவு, பால் பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தியில், பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அவை, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றன.
இறக்குமதி செய்யும் நாடுகள், பொருட்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. அதற்கேற்ப, தரத்தை பரிசோதிக்கும் அதிநவீன பகுப்பாய்வு மையங்கள் தமிழகத்தில் குறைவாக உள்ளன. இதற்காக தனியார் ஆய்வகங்களில் சோதனைகளுக்கு சிறு, குறு நிறுவனங்கள் அதிகம் செலவிடுகின்றன.
குறிப்பாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் தரப் பரிசோதனைக்கு, சென்னைக்கு எடுத்து வர வேண்டியுள்ளது.
டி.என்.எபெக்ஸ் எனப்படும் தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், வேளாண் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி தரத்தை உறுதி செய்யவும், ஏற்றுமதி தரச்சான்று வழங்கவும், நவீன உணவு பகுப்பாய்வுக் கூடத்தை, மதுரை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் அமைக்கும் பணியை துவங்கியுள்ளது.
சவால்கள்
இறக்குமதி செய்யும் நாடுகள், பொருட்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்துவது
தரத்தை பரிசோதிக்கும் அதிநவீன பகுப்பாய்வு மையங்கள் குறைவாக இருப்பது
தனியார் ஆய்வகங்களில் சோதனைகளுக்கான அதிக செலவு

