நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க விரைவில் ரூ.2,250 கோடியில் இயக்கம்
நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க விரைவில் ரூ.2,250 கோடியில் இயக்கம்
ADDED : ஆக 09, 2025 11:37 PM

புதுடில்லி:அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து இந்திய ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு விரைவில் 2,250 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
இந்திய ஏற்றுமதியை அதிகரிக்க, இயக்கம் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் சார்பில், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
எம்.எஸ்.எம்.இ., மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைப்பது, வெளிநாடுகளில் கிடங்கு வசதி ஏற்படுத்தி தருவது மற்றும் சர்வதேச அளவில் பிராண்டிங் செய்ய உதவுவது உள்ளிட்ட அம்சங்களை இந்த இயக்கம் கொண்டிருக்கும்.
வணிக நடைமுறைகளை எளிதாக்குவது, உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பது, புதிய சந்தைகள், வினியோக தொடர் மற்றும் பொருட்கள் குறித்தும் ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வரி விதிப்பு சவால்களை புரிந்து கொள்ள, கடந்த சில நாட்களில் வர்த்தக துறை அமைச்சகத்தின் சார்பில், தொழில்துறையினருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ள ன.
உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க ஏதுவாக, விரை வில் நடக்க உள்ள ஜி.எஸ். டி., கவுன்சில் கூட்டத்தில் வரி அடுக்குகளை குறைப்பது குறித்தும், எளிமையாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.