ரூ.30,000 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: தப்பியது இன்போசிஸ்
ரூ.30,000 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: தப்பியது இன்போசிஸ்
ADDED : ஜூன் 07, 2025 11:54 PM

புதுடில்லி:இன்போசிஸ், 32,403 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி கோரிக்கைக்கான நோட்டீசில் இருந்து நிவாரணம் பெற்றுள்ளதாக, தெரிவித்துள்ளது.
கடந்த 2024 ஜூலையில், இன்போசிஸ் நிறுவனம், அதன் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெறப்பட்ட சேவைகளுக்கு, ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ், 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரை, ஜி.எஸ்.டி., செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
அதற்கு விளக்கம் கேட்டு ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குநரகம் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதுகுறித்து, இன்போசிஸ் நிறுவனம் தேசிய பங்கு சந்தை தாக்கலில் தெரிவித்திருப்பதாவது:
ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ், ஐ.ஜி-.எஸ்.டி., செலுத்தாத பிரச்னையில், கடந்த 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய 32,403 கோடி ரூபாய் செலுத்தவில்லை என கூறி, இதற்குரிய விளக்கம் கேட்டு ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதுகுறித்து நிறுவனம் அளித்த பதிலை ஏற்றுக்கொண்டதையடுத்து, இவ்வழக்கை முடித்துக் கொண்டதாக, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, புலனாய்வு இயக்குநரகத்திடம் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.