மருத்துவ சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.500 கோடியில் திட்டம்
மருத்துவ சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.500 கோடியில் திட்டம்
ADDED : நவ 09, 2024 10:43 PM

புதுடில்லி:நாட்டில் முக்கிய மருத்துவ சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துஉள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், மருத்துவ சாதனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி, திறன் மேம்பாடு, மருத்துவ ஆய்வுகள், பொது கட்டமைப்பு மேம்பாடு, தொழில் ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்ததாவது:
புதிய திட்டமானது, மருத்துவ சாதன உற்பத்தியாளர்களுக்கு உதவுவதுடன் மட்டுமின்றி, இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்ற உத்வேகம் தருவதாகவும் இருக்கும். மருத்துவ சாதன உற்பத்தி நிறுவனங்கள், இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
துணை திட்டம் வாயிலாக, மருத்துவ சாதனங்கள் உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஆய்வகம், வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம், விலங்குகள் ஆய்வகம் ஆகியவற்றை அமைக்க தேவையான நிதியுதவியும் அளிக்கப்படும்.
இரண்டாவது துணை திட்டமானது, முக்கிய மருத்துவ சாதனங்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும்.
மூன்றாவது துணை திட்டம், மருத்துவ சாதனங்கள் துறைக்கான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும்.
இது தவிர, விலங்குகள் தொடர்பான ஆய்வு படிப்புகளுக்கான நிதி ஆதரவுக்கு நான்காவது திட்டமும் உள்ளது.
மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க தேவையான நிதியுதவி செய்ய, ஐந்தாவது துணை திட்டமும் இடம்பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.