இந்தியாவில் இருந்து மீன் ஏற்றுமதி ரஷ்யா ஒப்புதல் தரும் என எதிர்பார்ப்பு
இந்தியாவில் இருந்து மீன் ஏற்றுமதி ரஷ்யா ஒப்புதல் தரும் என எதிர்பார்ப்பு
ADDED : நவ 19, 2025 12:00 AM

புதுடில்லி: இந்தியாவில் இருந்து மீன் ஏற்றுமதி செய்ய, 25 நிறுவனங்களுக்கு ரஷ்யா விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், இறால் 66 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 41,500 கோடி ரூபாய்க்கு, இறால் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், இறால் ஏற்றுமதி பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதனை தவிர்க்க, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை பரவலாக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியன், கூடுதலாக நம் நாட்டைச் சேர்ந்த 102 கடல்சார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பியுஷ் கோயல் தெரிவித்ததாவது:
இந்தியா தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகளுடன் இறால், மீன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறது. விரைவில் நம் நாட்டில் இருந்து மீன் ஏற்றுமதி செய்ய, 25 நிறுவனங்களுக்கு ரஷ்யா ஒப்புதல் அளிக்க உள்ளது.
தற்போது சில விஷயங்கள் தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு நடைபெற்று வரும் நிலையில், அவை முடிவுக்கு வந்தவுடன், வரும் மாதங்களில் ஐரோப்பிய யூனியன் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

