சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் கோவையில் ரூ.58 கோடி முதலீடு
சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் கோவையில் ரூ.58 கோடி முதலீடு
ADDED : நவ 17, 2025 11:49 PM

சென்னை: கோவையில், சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், 58 கோடி ரூபாய், ஐ.பி.எம்., இந்தியா நிறுவனம், 54 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க, 'மெப்ஸ்' சிறப்பு பொருளாதார மண்டலம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள, சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலமான, 'மெப்ஸ்' சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவின் கூட்டம் நேற்று நடந்தது.
அதன் வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகம், புதுச்சேரி, அந்தமானில், 2,700க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 158 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதில், சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், கோவையில், 58 கோடி ரூபாய் முதலீட்டில், 1,010 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மின் சாதன ஆலை அமைக்க உள்ளது.
ஐ.பி.எம்., இந்தியா நிறுவனம், கோவையில் உள்ள தனியார் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தொழில்நுட்ப துறையில், 600 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 54.34 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

