ADDED : நவ 16, 2025 11:40 PM

புதுடில்லி: கடந்த மாதம், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, மாற்றமின்றி 25,500 கோடி ரூபாயாக இருந்ததாக, ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா, கடந்த மாதம் பொருளாதார தடை விதித்தது. இம்மாதம் 21ம் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வருகிறது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் - மிட்டல் எனர்ஜி மற்றும் மங்களூர் ரிபைனரி நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்தன.
இந்நிலையில், சி.ஆர்.இ.ஏ., எனும் எரிசக்தி மற்றும் துாய காற்றுக்கான ஆராய்ச்சி மையம், கடந்த மாதத்துக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகம் குறித்த தரவுகளை வெளியிட்டு உள்ளது.
இதில், சீனாவுக்கு அடுத்தபடியாக கடந்த மாதம் இந்தியா தான் அதிகளவிலான ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைப் போலவே 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர நிலக்கரி 3,580 கோடி ரூபாய்க்கும்; பிற எண்ணெய் பொருட்கள் 2,264 கோடி ரூபாய்க்கும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.
தடை அமலாவதற்கு முன், கணிசமான அளவுக்கு இறக்குமதி செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

