இந்தியாவில் ரயில் பெட்டிகள் தயாரிக்க ரஷ்யா விருப்பம்
இந்தியாவில் ரயில் பெட்டிகள் தயாரிக்க ரஷ்யா விருப்பம்
ADDED : நவ 28, 2024 02:15 AM

புதுடில்லி:இந்தியாவில் ரயில் பெட்டிகள் மற்றும் பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை ரஷ்யா அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய ரயில் நிறுவனமான டி.எம்.எச்., கடந்த வாரம் தன் விருப்பத்தை மத்திய அரசிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் அதிகரித்து வரும் ரயில் பெட்டிகள் மற்றும் பாகங்களின் தேவையால், இந்தியாவில் ஆலை அமைத்து, இங்கிருந்து இறக்குமதி செய்துகொள்ள ரஷ்யா விரும்புகிறது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டி.எம்.எச்., தலைமை செயல் அதிகாரி கிரில் லிபா, இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். மற்ற நாடுகளைவிட கடன் வட்டியில் இந்தியா வேறுபட்டுள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்ய ரயில் நிறுவனம் தயாராக இருப்பதாக கூறினார். இந்தியாவில் ஆலைகளை அமைத்து மேம்படுத்துவதுடன், ரயில்வே உதிரி பாகங்களை அதிகளவில் தயாரித்து, அதில் ரஷ்ய சந்தைக்குத் தேவையானவற்றை வினியோகிக்கச் செய்ய விரும்புவதாகவும் லிபா கூறினார்.
ஏற்கனவே, பல துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க நெருக்கமான உறவை இந்தியாவும், ரஷ்யாவும் கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்தியாவில் ரயில்களை தயாரித்து, அவற்றின் இறக்குமதியை ரஷ்யா அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.