வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு மாற 'சாம்சங்' பரிசீலனை
வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு மாற 'சாம்சங்' பரிசீலனை
ADDED : ஏப் 24, 2025 11:57 PM

புதுடில்லி:அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க, வியட்நாமில் இருந்து உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் பரிசீலித்து வருகிறது. அத்துடன், ஸ்மார்ட் போன்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு, இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2020--21ம் நிதியாண்டில் துவங்கப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கான பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்படி, சாம்சங் நிறுவனத்துக்கான அவகாசம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுஅடைந்தது.
உற்பத்தி இலக்கை எட்டாததால், இரண்டாவது ஆண்டில் சாம்சங் ஊக்கத்தொகையை பெறவில்லை. எனவே, தவறவிட்ட ஓராண்டுக்கு பதிலாக, தற்போது பி.எல்.ஐ., திட்டத்தை ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், சாம்சங் நிறுவனம் 3,200 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

