அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க பி.எல்.ஐ., திட்ட விரிவாக்கம் தேவை எஸ்.பி.ஐ., அறிக்கையில் பரிந்துரை
அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க பி.எல்.ஐ., திட்ட விரிவாக்கம் தேவை எஸ்.பி.ஐ., அறிக்கையில் பரிந்துரை
ADDED : ஏப் 07, 2025 01:16 AM

புதுடில்லி:அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பால் உருவாகி உள்ள உலகளாவிய வர்த்தகப் போட்டியை எதிர்கொள்ள, மத்திய அரசு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை, பிற துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
உலகளாவிய வர்த்தகப் போக்கு மாறி இருப்பதால், இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துஇருக்கிறது.
குறிப்பாக, சீன பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது.
எனவே, மத்திய அரசு, தற்போதைய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை, ஐவுளி, பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய முக்கிய துறைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகளை சேர்ப்பதுடன், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
இது, உள்நாட்டு தொழிற்சாலைகள் முதலீட்டை பெற உதவுவதுடன், உலக சந்தையில் இந்திய தயாரிப்புகள் போட்டியிட முடியும்.
சீன பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து இருப்பதால், இந்தியா, ஐவுளித்துறை, ஆயத்த ஆடை மற்றும் காலணி போன்ற துறைகளில், தனது சந்தை பங்களிப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
கூடுதலாக, இரும்பு மற்றும் ஸ்டீல் தயாரிப்புகளில் வலுவாக உள்ள இந்தியா, வர்த்தக மாற்றங்களால் நன்மைகளை பெற முடியும்.
மேலும், அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா 15 சதவீத வரி விதிக்கும் நிலையில், இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனை, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சின்போது, குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

