கடற்பாசி பூங்கா நிலம் குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
கடற்பாசி பூங்கா நிலம் குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 20, 2025 01:34 AM

சென்னை:புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும், பல்நோக்கு கடற்பாசி பூங்காவில், காலியாக உள்ள நிலங்களை குத்தகைக்கு பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
மீன்வளத்துறை சார்பில், நிலங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், ஒரு ஏக்கர் பரப்பளவில், ஒரு பிளாட் என்ற அடிப்படையில், 67 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட உள்ளது.
இந்த நிலங்களை, கடற்பாசி துறையில் உள்ள தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள், மீன்வள கூட்டுறவு சங்கம் உள்ளிட்டோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். தேவைப்படும் நிலங்களுக்கான பட்டியலை சமர்ப்பிக்கலாம்.
அதன் அடிப்படையில், நிலத்தேர்வு இறுதி செய்யப்படும்.
ஒரு ஏக்கர் நிலத்தின் தொகை, 25 லட்சம் ரூபாய். நிலத்தின் குத்தகை காலம் 99 ஆண்டுகள். வருடாந்திர பராமரிப்பு செலவு பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த நிலங்களில் உருவாகும் தொழிற்சாலைகள், தமிழக அரசின் நடைமுறையில் உள்ள தொழில்துறை கொள்கையின்படி சலுகைகளை பெற தகுதி உடையவை.
விருப்பமுள்ளோர், இதற்கான விண்ணப்ப படிவத்தை, https://www.fisheries.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
அல்லது சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு, மீன்வளத்துறை கடல் மீன் வளர்ப்பு பிரிவு துணை இயக்குநரை, 93848 24212 என்ற எண், qmaricultureho@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், தொழில்முனைவோராக இருக்க வேண்டும்; கடற்பாசி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களாக இருக்கலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 30ம் தேதி, மாலை 4:00 மணிக்குள், தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம்.

