பங்கு வர்த்தகத்தில் நுாதன மோசடி அமெரிக்க நிறுவனத்துக்கு செபி தடை
பங்கு வர்த்தகத்தில் நுாதன மோசடி அமெரிக்க நிறுவனத்துக்கு செபி தடை
ADDED : ஜூலை 04, 2025 11:38 PM

மும்பை, :இந்திய பங்குச் சந்தையில் மோசடி வணிகத்தின் வாயிலாக, 36,500 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பங்கு வணிக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் குழுமத்துக்கு, செபி இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், அதன் கணக்கில் உள்ள 4,844 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கிஉள்ளது.
செபி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:
உலகளாவிய பங்கு வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் குழுமம், தனது நான்கு நிறுவனங்கள் வாயிலாக, 18 வர்த்தக நாட்களில், பேங்க் நிப்டி குறியீட்டில் 15 நாட்களும், நிப்டி குறியீட்டில் மூன்று நாட்களும் செயற்கையாக பங்கு விலைகளை ஏற்றி, இறக்கி, கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது.
இதற்கு தன் இந்திய மற்றும் அன்னிய நிறுவனங்களை பயன்படுத்தி, டே டிரேடிங் எனப்படும் தினசரி வர்த்தகத்தில் குறியீட்டை கட்டுப்படுத்தல், காலாவதி நாளில் விலையை மாற்றுதல் ஆகிய இரண்டு உத்திகளை செயல்படுத்தி உள்ளது.
கடந்த 2024 ஜன., 17 ஒரே நாளில், ஜேன் ஸ்ட்ரீட் தினசரி வர்த்தகத்தில் 61.60 கோடி ரூபாய் நஷ்டத்தை பதிவு செய்த நிலையில், பேங்க் நிப்டி குறியீட்டில் 734.93 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது.
இதே போல், காலாவதி நாளில் விலையை மாற்றுதல் என்பது கடந்த 2024 ஜூலை 10 மற்றும் இரண்டு வர்த்தக நாட்கள் மோசடி நடைபெற்றுஉள்ளது.
கடந்த 2023 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலத்தில், இந்நிறுவனம், இண்டெக்ஸ் ஆப்ஷன் வாயிலாக, 43,289 கோடி ரூபாயை மொத்த லாபமாக ஈட்டி உள்ளது.
இதே காலத்தில், பியூச்சர் பங்குகள், இண்டெக்ஸ் பியூச்சர், ரொக்க பிரிவுகள் சேர்த்து, 7,687 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம்அடைந்துள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி தெரிய வந்ததால், பங்கு வணிகத்தில் ஈடுபட ஜேன் ஸ்ட்ரீட் குழுமத்துக்கு தடை விதிக்கப்பட்டு, அதன் 4,844 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
உலகின் எல்லா பகுதிகளிலும், அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும் செபி உத்தரவு குறித்து அதனிடம் முறையிடப்படும் என்றும் ஜேன் ஸ்ட்ரீட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.