ADDED : ஜூலை 08, 2025 01:05 AM

புதுடில்லி : முன்பேர வணிக பிரிவுகளில் மோசடிகளை கண்டறிய கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளை தவறாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டியதாக, செபி குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வாறு ஈட்டிய 4,844 கோடி ரூபாய் லாபத்தை திருப்பித் தரும் வரை, இந்திய சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடை விதிப்பதாக கடந்த வெள்ளியன்று அறிவித்தது.
இந்நிலையில், ஜேன் ஸ்ட்ரீட் விவகாரம் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு திறன் மீது முதலீட்டாளர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து துஹின் காந்த பாண்டே தெரிவித்ததாவது:
ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு எதிரான செபியின் நடவடிக்கை ஒரு கண்காணிப்பு விவகாரம். அதிக அளவிலான தரவு பகுப்பாய்வுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தவிர்க்க கண்காணிப்பு அவசியம் என்பதால், வரும் நாட்களில் பங்குச் சந்தை மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடரும்.
ஜேன் ஸ்ட்ரீட் போன்று இன்னும் பல நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கும் என தோன்றவில்லை. ஏமாற்று வேலைகளைப் பொறுத்தவரை, பொதுவான நடைமுறை என ஒன்று கிடையாது. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதங்களில் மோசடியில் செயல்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.