ADDED : ஜூலை 17, 2025 12:17 AM

புதுடில்லி,:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் மற்றும் இ.டி.எப்.,கள், வைத்திருக்கும் தங்கம், வெள்ளிக்கு, ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறையைக் கொண்டுவர செபி திட்டமிடுகிறது.
தற்போது, இந்நிறுவனங்கள் தங்கம், வெள்ளிக்கு லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் விலையைப் பயன்படுத்தி, மதிப்பை கணக்கிடுகின்றன.
இதில் அமெரிக்க டாலரை இந்திய ரூபாய்க்கு மாற்றுவது, சுங்க வரிகள் சேர்ப்பது என பல நிலைகள் உள்ளன.
ஆனால், தங்கம், வெள்ளி சார்ந்த மற்ற டெரிவேட்டிவ்களுக்கு இந்தியச் சந்தைகளில் உள்ள முன்பேர ஒப்பந்தங்களின் விலை பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரே பொருளுக்கு, இரண்டு வெவ்வேறு மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன.
இதையடுத்து, இனி உள்நாட்டு விலைகளுக்கு முன்னுரிமை வழங்க செபி திட்டமிட்டுள்ளது. இனி, தங்கம், வெள்ளியை மதிப்பிட உள்நாட்டுச் சந்தை விலைகளை பயன்படுத்த வேண்டும் என்று செபி பரிந்துரைத்துள்ளது.
இது மதிப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும் என்றும்; உள்நாட்டில் தங்கம், வெள்ளிக்கு ஒரு பொதுவான விலை நிர்ணய அளவுகோலைக் கொண்டுவர உதவும் என்றும் செபி கருதுகிறது.
மேலும், உள்நாட்டுச் சந்தைகளில் விலைகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் செபி தெரிவித்துள்ளது. இது குறித்து, பொதுமக்கள் வரும் ஆக., 6 வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

