ADDED : டிச 29, 2024 10:13 PM

புத்தாண்டுக்கான பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வரும் ஆண்டில் முதலீடு நோக்கில் கவனிக்க வேண்டிய துறைகள் பற்றி ஒரு பார்வை!
இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் சவாலான பல்வேறு காரணிகளை மீறி, இந்தியா வளர்ச்சியை சாத்தியமாக்கி கொண்டுள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய போக்கு கள் புதிய மாற்றங்களையும், சவால்களையும், வாய்ப்புகளையும் கொண்டு வருவதாக அமைந்துஉள்ளன.
இந்த போக்கு, முதலீட்டாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை அளிப்பதாக விளங்குகிறது. 2025ம் ஆண்டிற்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளவர்கள், முதலீடு நோக்கில் வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளையும் அறிந்திருப்பது அவசியம்.
மின் வாகனங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே மின் வாகனங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் மின் வாகனத்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. பல்வேறு புத்திளம் நிறுவனங்கள் துடிப்புடன் செயல்பட்டு வருவதோடு, பாரம்பரிய வாகன நிறுவனங்களும் மின் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
மக்கள் மத்தியிலும் மின் வாகனங்கள் போக்குவரத்திற்கு உரிய தேர்வாக விளங்குகின்றன. சுற்றுச்சூழல் நட்பான தன்மை காரணமாக, மின் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். அரசு கொள்கை ஆதரவு, மானியம், பசுமை தொழில்நுட்பம் மற்றும் அதிகரிக்கும் பேட்டரி திறன் ஆகிய அம்சங்கள் இத்துறை வளர்ச்சிக்கு உதவும்.
எனவே, மின் வாகனத்துறை சார்ந்த பங்குகளும், நிதிகளும் கவனத்தை ஈர்க்கின்றன. அதே போல, நகரமயமாக்கல் தொடரும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டதாக அமைகிறது.
குறிப்பாக நீடித்த வளர்ச்சி தன்மை கொண்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை தொழில்நுட்பங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரம்பரிய முதலீடு தவிர, ரியல் எஸ்டேட் முதலீடு, அறக்கட்டளை நிதிகள் வாயிலான முதலீடும் ஏற்றதாக அமையும் என கருதப்படுகிறது.
பசுமை நுட்பம்
காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் பசுமை தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய அரசும் நீடித்த வளர்ச்சி, மறுசுழற்சி எரிசக்தி, சூரிய மின்சக்தி போன்றவற்றை ஊக்குவித்து வருகிறது.
இந்த நுட்பங்கள் சார்ந்த துறைகள் அதிக வளர்ச்சி காணும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். நிறுவனங்களும் பசுமை நுட்பங்களை நாடுவதால், வளர்ச்சி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
பசுமை கருப்பொருள் சார்ந்த நிதிகள், பசுமை வைப்பு நிதி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முதலீடு நல்ல வாய்ப்பாக அமைவதோடு, சமூக பொறுப்புணர்வின் அடையாளமாகவும் அமைகின்றன.
கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., நுட்பம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஏ.ஐ., தாக்கம் செலுத்தாத துறைகளே கிடையாது என கருதப்படும் நிலையில், ஏ.ஐ., பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்களும் இதற்கு ஈடு கொடுக்க முயன்று வருகின்றன. ஏ.ஐ., வளர்ச்சி காரணமாக கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப துறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
இந்த போக்குகளை மனதில் கொண்டு முதலீடு செய்வது, வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள உதவுவதோடு, முதலீடு பரவலாக்கத்திற்கும் வழிவகுக்கும்.