செமிகண்டக்டர் உயர்திறன் மையம் தமிழக அரசு - சென்னை ஐ.ஐ.டி., கூட்டு ரூ.100 கோடி முதலீட்டில் அமைகிறது
செமிகண்டக்டர் உயர்திறன் மையம் தமிழக அரசு - சென்னை ஐ.ஐ.டி., கூட்டு ரூ.100 கோடி முதலீட்டில் அமைகிறது
ADDED : ஆக 02, 2025 01:38 AM

சென்னை:சென்னை ஐ.ஐ.டி., உடன் தமிழக அரசு இணைந்து, செமிகண்டக்டர் உயர்திறன் மையம் அமைக்கிறது. இதற்கான அறிவிப்பை, தொழில் துறை அமைச்சர் ராஜா, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜா கூறியதாவது:
செமிகண்டக்டர் துறையில் அதிக திறன்மிக்க பணியாளர்கள் கிடைப்பது பிரச்னையாக இருப்பதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.
எனவே, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் செமிகண்டக்டர் உயர் திறன் மற்றும் வடிவமைப்பு மையம் அமைக்கிறது.
இதற்காக தமிழக அரசு, 100 கோடி ரூபாய் முதலீடு செய்யும். அங்கு, மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உருவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். இதன் வாயிலாக, செமிகண்டக்டர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும். இதனால், செமிகண்டக்டர் தலைமையிடமாக தமிழகம் உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப் யூட்டர் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு, 20 நாளில் இருந்து ஒன்றரை மாதம் வரை, சிறப்புவாய்ந்த பயிற்சி அளிக்கப்படும். அதில் உற்பத்தி, சோதனை செய்வது என, பல வகையில் பயிற்சி அளிக்கப்படும். இதனால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல் கட்டமாக, 2,000 பேருக்கும், அடுத்த கட்டமாக, 2,000 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படும். பின், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.