விலை குறைப்பு குறித்து புகார் இணையதளத்தில் தனிப்பிரிவு
விலை குறைப்பு குறித்து புகார் இணையதளத்தில் தனிப்பிரிவு
ADDED : செப் 21, 2025 12:24 AM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., குறைப்புக்கு ஏற்ப, விலை குறைக்கப்படா விட்டால், நுகர்வோர் புகார் செய்ய, தேசிய நுகர்வோர் உதவி இணைய தளத்தில் தனிப்பிரிவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
நுகர்வோரின் குறைகள், புகார்களை பதிவு செய்ய, தேசிய நுகர்வோர் உதவி இணையதளம் செயல்படுகிறது.
இன்கிராம் எனப்படும் இதில், குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., மற்றும் அதுதொடர்பான குறைகள், புகார்களை நுகர்வோர் தெரிவிக்க தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விலை குறைப்பு தொடர்பான புகார்களுக்கான தனிப்பிரிவில் வாகனங்கள், வங்கி, நுகர்வோர் பொருட்கள், இ-காமர்ஸ், வேகமாக விற்றுத்தீரும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய வற்றைசேர்ந்த நிறுவனங்கள் மீது நுகர்வோர் புகாரை பதிவு செய்யலாம்.
ஜி.எஸ்.டி., குறைப்புக்கு ஏற்ப விலை குறைக்கப்படாதது குறித்த நுகர்வோரின் குறைகள், புகார்கள், சந்தேகங்களை கையாள, தேசிய நுகர்வோர் குறைதீர் பிரிவு அலுவலர்களுக்கு கடந்த 11ம் தேதி பயிற்சி வழங்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த 17ம் தேதி, தயாரிப்பு நிறுவனங்கள், இணையதள வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நுகர்வோர் விவகாரத் துறை செயலர் விவாதித்தார்.
இந்நிலையில், இணையதள தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்பின் பலனை நுகர்வோருக்கு நிறுவனங்கள் வழங்கும் உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.